இர்மா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்பது குறித்த முடிவுகளை விரைந்து மேற்கொள்வதற்காக, கரிபீயன் தீவுகளுக்கு சிறப்பு குழு ஒன்றினை கனேடிய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.
அந்த வகையில் குறித்த அநத குழுவினர் முதற்கட்டமாக பிரதான கரீபியன் தீவுகளில் ஒன்றான அன்ரிகுவாவுக்கு பயணித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார்.
அங்கு செலும் குழு, புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வாறான தேவைகள் காணப்படுகின்றன, எவ்வாறான மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்கலாம் என்ற ஆய்வுகளை விரைவாக மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கனடாவின் இராணுவத்தினர், பொதுமக்கள், வெளியுறவுப் பணியக அதிகாரிகள் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினரை அரசாங்கம் உதவிப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
அத்துடன் உலகில் எங்கு எப்போது அவசரகால நிலைமை ஏற்பட்டாலும், மிகக்குறுகிய கால நேரத்தினுள் அங்கு சென்று கடமையாற்ற தயாராக உள்ள கனடாவின் “டார்ட்” எனப்படும் சிறப்பு குழுவினரும் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இர்மா புயலில் பெருமளவு கனேடியர்களும் சிக்குண்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களுக்கான மேலதிக உதவிகளை கனடா மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவந்த நிலையி்ல், இந்த குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 300 கனேடியர்கள் இதுவரை தூதரக உதவிகளை கோரியுள்ளதாக வெளிவிவகார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.