ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடகொரியா தொடர்பான ஐ.நாவின் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரியா மீது, ஐ.நா பாதுகாப்புச் சபை கடந்த ஆண்டு விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னரும், அந்த நாட்டிடம் இருந்து இரும்பு, உருக்கு உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் இறக்குமதி செய்திருந்தன. இதுபற்றிய தகவல்களை ஐ.நா கண்காணிப்புக் குழு அம்பலப்படுத்தியுள்ளது.
ஐ.நாவின் தடைகளை மீறி, வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்ததாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் நியூயோர்க்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, அவருக்கு ஐ.நா தரப்பில் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என்றும், அவரிடம் கடுமையான கேள்விகள் தொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஐ.நாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் சுமுகமான உறவுகள் இருக்கவில்லை.
எனினும், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், ஐ.நாவுடனான உறவுகளை சிறிலங்கா சீர்படுத்தி வந்தது.
இந்தநிலையில், வடகொரிய விவகாரம், சிறிலங்கா அரசாங்கத்துக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.