இர்மா புயல்காரணமாக கரீபியன் தீவுகளில் சிக்குண்டு பாதிப்புகளை எதிர்நோக்கிய கனேடியர்கள் தொடர்பில் தனது கவலை வெளிபிட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ரொரன்ரோவில் இருந்து இணைய காணொளி மாநாடு ஊடாக விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிக்குண்டுள்ள கனேடியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவற்கு, அரசாங்கம் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும், அதனை நிறைவேற்றும் வரையில் தனிப்பட்ட ரீதியில் தானும் ஓயப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்குண்டுள்ள அனைத்து கனேடியர்களையும் மீண்டும் தாயகம் அழைத்து வருவதற்கு அரசாங்கம் மிக மிக கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் கனேடிய மத்திய அரசாங்கம் மிகவும் தாமதாக செயற்படுவதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஃபிறீலான்ட் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வார இறுதியில் சுமார் 390 பேர் கனடாவுக்க அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் வர்த்தக வானூர்திகள் மூலம் மேலும் பலர் அழைத்துவரப்பட உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெருமளவு கனேடியர்கள் தம்மை மீட்குமாறு இரந்து வேண்டிய போதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தாமதம் காணப்பட்டமைக்கான காரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித விமானங்களையும் அனுப்ப முடியாதிருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே விமானங்கள் தயாராக இருந்த போதிலும், அவை சென்று இறங்குவதற்கான விமான நிலையங்கள் இல்லாதிருந்ததாகவும், தற்போது முடிந்தவரை விரைவாக அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.