மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர் மெரினா கடற்கரையில் நிகழ்ச்சிகள் நடத்த சென்னை காவல்துறை தடை விதித்துள்ளதை காரணம் காட்டி, இந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க காவல்துறையினர் மறுத்தனர்.
ஆனாலும், காவல்துறை அனுமதியின்றி கடந்த மே 23ஆம் தேதி சென்னை மெரினாவில் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இதனயடுத்து இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதிகள் ஏ. செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் வழக்கின் தீர்ப்பை வரும் 19ஆம் தேதி அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த ஜூலை மாதம் கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்த இதழியல் மாணவி வளர்மதி, கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டம் போடப்பட்டதையடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை கடந்த வாரம் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து அவர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டமும் ரத்து ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.