மியன்மாரில் தீவிரமடைந்துவரும் வன்முறைகள் காரணமாக அங்கிருந்து தப்பித்து வங்காளதேசத்திற்குள் தஞ்சமடையும் பெருமளவு றொஹிங்கியா முஸ்லிம் மக்களின் தேவைகளுக்காகன அவசர நிதியாக கனடா 2.55 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
மியன்மாரில் இடம்பெறும் இந்த அநீதியானது இனச் சுத்திகரிப்புக்கு நேரடியான உதாரணம் என்று அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், ஐ.நா ஊடாக இந்த உதவித் தொகையினை கனேடிய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்து்ளளது.
பெருளவான அகதிகள் வங்காளதேசத்தின் கிழக்கு பிராந்தியங்களுக்குள் வருகை தந்துள்ள நிலையில், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்காக 77மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வங்காளதேசத்தில் உள்ள ஐ.ந அதிகாரிகள் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தனர்.
மியன்மாரில் உள்ள சிறுபான்மை றொஹிங்கியா மக்களுக்கு எதிராக, பெளத்த மதத்தைச் சேர்ந்த அந்த நாட்டு இராணுவத்தினர் உள்ளிட்டோர் மேற்கொண்டுவரும் கொடூரங்களால், சுமார் நான்கு இலட்சம் றொஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேறியுள்ளனர்.
ஏற்கனவே வங்காளதேசத்தில் நான்கு இலட்சம் றொஹிங்கியா முஸ்லிம்கள் உள்ள நிலையில், அதற்கும் மேலதிகமாகவே இந்த நான்கு இலட்சம் மக்களின் வெளியேற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இந்த மக்கள் மீதான வன்முறைகள் குறித்தும், பெருமளவான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளமை குறித்தும் கனடா மிகுந்த கவலை கொண்டுள்ளதாக கனடாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்