இன்விக்டஸ்” விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதற்காக, இளவரசர் ஹென்றி இன்று ரொரன்ரோவுக்கு வருகை தருகிறார்.
போர்களில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட படை வீரர்களுக்காக நடாத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியினை இளவரசர் ஹென்றியே 2014ஆம் ஆண்டில் உருவாக்கியவர் என்ற நிலையில், இன்று அவர் ரொரன்ரோவில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
பாதிக்கப்பட்ட படை வீரர்களுக்காக தற்போதய படை வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த விளையாட்டு நிகழ்வுகள் முதன் முறையாக கனடாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று ஆரம்பமாகும் இந்த விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் 30ஆம் நாள் வரையில் தொடரவுள்ள நிலையில், இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 550 போட்டியாளர்கள், 12 விளையாட்டுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த விளையாட்டு நிகழ்வுகளைப் பார்வையிடுவதற்கான நுளைவுச் சீட்டுகள் 25 டொலர்களுக்கும், ஆரம்ப விழா மற்றும் இறுதிநாள் நிறைவு விழா ஆகியவற்றுக்கான நுளைவுச் சீட்டுகள் 60 டொலர்களில் இருந்தும் விற்கப்படுகின்றன.
இதேவேளை முன்னதாக இன்று காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட இளவரசர் ஹென்றி, பின்னர் இன்று பிற்பகல் விளையாட்டு போட்டிகளிலும் பயிற்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாளை மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் போதைக்கு அடிமையானோருக்கான ரொரன்ரோ நிலையத்திற்கும் செல்லவுள்ள அவர், அதன் திறப்பு விழாவுக்கு முன்னதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.