தமிழ் இனத்தையும், அதற்கு ஒரு வீர வரலாறு இருக்கிறது என்பதையும் உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டுமே என்று இயக்குனர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதுபெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள், ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை இலண்டன் அகிலன் பவுன்டேசனின் அனுசரணையில் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காலம் எமது முகத்தில் கோடுபோட்டாலும், அந்த காலத்தில் நிலத்தில் கோட்டை கலைஞர்கள் இட்டுள்ளனர் எனவும், இந்த ஈழ மண்ணில் எத்தனையோ கலைஞர்கள், கலைகள் இருந்துள்ள நிலையில், அதன் அத்தனை அறுவடைகளும் இந்த மண்ணையே சாரூம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்கள் மட்டும் தான் தமிழ் மொழியை இன்னும் அழுத்தமாக காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் எனவும், தாயகத்திலிருந:த புலம் பெயர்ந்தவர்கள் தமிழ் மொழியை கட்டிக் காப்பதுபோல தமிழ் நாட்டில்கூட யாரும் தமிழ் மொழியை கட்டிக் காக்கவில்லை எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அகநானூறு, புறநானூறு என்று எவ்வளவோ படைப்புகள் இருக்கின்ற போதிலும், ஈழத் தமிழர் படைப்புகளிலே தமிழ் இன்னும் சோர்ந்து போய்விடவில்லை எனவும், அதுவே உங்களுக்கு பெருமை தரும் விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொழியின் மீதும் இனத்தின் மீதும் அழுத்தமான பக்தியை உங்களை விட யாரும் வைத்ததில்லை எனவும், தான் இந்த ஈழ பூமியில் கால்வைக்கும் போதெல்லாம் பெருமையாக உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் தமிழர்களும் தமிழச்சிகளும் வீர வரலாற்றை புத்தகங்களிலும் ஏடுகளிலும் தான் வாசித்துப் பார்த்திருக்கின்ற போதிலும், யாரும் வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்ததில்லை எனவும், ஆனால் வீர வரலாற்றை வாழ்ந்த தமிழர்களும் தமிழச்சிகளும் ஈழத்தில் தான் இருக்கின்றார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இன்னும் நீங்கள் சோரம் போகவில்லை எனவும், ஈழத்தில் ஏற்பட்ட நெருக்கடிகூட நல்லதற்கோ என்று தான் நினைத்ததுண்டு எனவும், அந்த நெருக்கடிகளின் காரணமாக புலம் பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி அங்கு முளைத்து விருட்சமாக இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழனை அடையாளப்படுத்துவது ஈழமண் மட்டும் தான் எனவும், கறுப்பாக ஒரு தமிழன் இருந்தான், அவன் வீர வரலாறு கொண்டவன் என்று அடையாளப்படுத்தியது பிரபாகரன் மட்டும் தான் என்றும், இல்லாவிட்டால் தமிழ் என்ற ஒன்று இருப்பது உலகில் வேறு எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழினத்தை உலகிற்கு அடையாளம் காட்டியவர் பிரபாகரன் மட்டுமே எனவும், ஈழ மண்ணில் இருக்கின்ற மூத்த கலைஞர்களுக்கு தனது கைகளால் விருது வழங்குவதைவிட அவர்களது கரங்களால் தான் ஆசீர்வாதம் வாங்கிச் செல்ல விரும்புவதாகவும் இயக்குனர் பாரதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.