தங்களது வழக்குகளை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டாம் என்று கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவுப் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் 16 பொது அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் இன்று நல்லூரில் ஒன்று கூடிக் கலந்துரையாடியுள்ளன.
கலந்துரையாடலின் முடிவில் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான சுலக்சன், தர்சன், திருவருள் ஆகியோரின் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு உரிய காரணங்களின்றி மாற்றப்பட்டுள்ளன எனவும், இதனால் அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாம் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களை கருத்தில் கொண்டே அந்த அரசியல் கைதிகள் கடந்த 13 நாட்களாக உணவுப் புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், இவர்களின் நியாயபூர்வமான கோரிக்கை தொடர்பில் ஆக்கபூர்வமான முடிவெடுத்து, அவர்களது வழக்குகளை உடனடியாக வவுனியா நீதிமன்றுக்கு மீண்டும் மாற்றுமாறும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அது தொடர்பான அறிவித்தலை அந்த அரசியல் கைதிகள் மூவருக்கும் உடனடியாக அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுப்பதாகவும், அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசாங்கம் அரசியல் தீர்மானமெடுத்து, நிபந்தனையின்றி அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுப்பதாகவும் இலங்கை சனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.