தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் தழுவிய ரீதியில் நடத்தப்பட இருக்கும் முழுமையான கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்ட பின்பு தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்ற அரசியல் கைதிகள் சாகும்வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தப்பது.
அவர்களின் கோரிக்கைகளை இழுத்தடிக்காது உடனடியாக நிறைவேற்றுமாறும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் பொது அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ள வட மாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பு போராட்டமானது, தமிழர்கள் போராடித்தான் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற யதார்த்த நிலையை உணர்த்தி நிற்கின்றன என்று அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் துணையோடு கைது செய்யப்பட்டு, அதிகார அத்துமீறலின் கீழான அச்சுறுத்தல் நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே அடிப்படை ஆதார மாகக்கொண்டு, நீதிக்குப் புறம்பாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்திவரும் இலங்கை அரசின் தந்திரத்தனமான போக்கை எமது ஒன்றுபட்ட பலத்தின் மூலம் முறியடிக்க தாயக மக்கள் அனைவரும் இக்கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பது காலத்தின் கட்டாயமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அநீதியான முறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் 132 தமிழ் உறவுகளுக்காக நாங்கள் உறுதுணையாக இருக்கின்றோம் எனவும், அவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம் என்பதையும் இலங்கை அரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடித்துரைக்கும் விதமாகவும் நாம் இக்கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை நாளை நடைபெறவுள்ள முழுமையான கதவடைப்புக்கு வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தனியார் துறையினர், ஆசிரியர் சமூகம், அரச ஊழியர் சங்கம் என்பவற்றின் ஒத்துழைப்புக்களையும் அது கோரியுள்ளது.
அதேபோன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புப் போராட்டத்திற்கு அனைத்து சமூகங்களையும் ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையும் வேண்டுகோள் விடுத்துள்ளது.