தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியாக எழுந்துள்ள மக்களது போராட்டங்கள் தொடர்பில், ஒருங்கிணைப்புக்குழு முதலமைச்சர் விக்னேஸ்வரனை இன்று ஞாயிறு மாலை சந்தித்து உரையாடியுள்ளது.
இதன்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே உணவுப் புறக்கணிப்புப் போராட்டதில் குதித்துள்ள அரசியல்கைதிகளது உடல்நிலையில் குறிப்பிட்டு சொல்லத்தக்க முன்னேற்றமேதுமின்றி உள்ளதாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு இரண்டாவது தடவையாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை திங்கட்கிழமை அனுராதபுரம் நீதிமன்றில் அவர்களை விசாரணைகளிற்கு முன்னிலைப்படுத்துவது சாத்தியமில்லையென சிறைச்சாலை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக அவர்களது உடல்நிலை மோசமடைந்ததையடுத்தே சிறைச்சாலை அதிகாரிகள் பலாத்காரமாக மீண்டும் அவர்களை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று அனுமதித்திருந்தனர்.
தொடர்ந்தும் அவர்களிற்கான சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்ற நிலையில், அவர்களது உடல்நிலை அச்சந்தருவதாக அமைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குடும்பத்தவர்களிற்கு தகவல் வழங்கியுள்ளன.
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடும் 3 அரசியல் கைதிகளதும் போராட்டம் இன்றுடன் 21வது நாளை தாண்டியுள்ளதுடன், கைதிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் முன்னெடுக்கும் 11வது தடவையான உணவு தவிர்ப்பு போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.





