இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுஉறுப்பினர் யஸ்மின் சூக்கா, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை சிறிலங்கா இராணுவம் கண்டித்துள்ளது.
இறுதிப் போர்க் காலத்தில் போர்க்குற்றம் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிவதிவிட பிரதிநிதியாக செயற்பட்டநிலையில், தற்போது இலங்கை திரும்பியுள்ளார்.
அவர் கஜபா படைப்பிரிவின் அதிகாரியாக செயற்படும் நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் அநுராதபுரம் சாலியபுரவில் கஜபா படைப்பிரிவின் நிகழ்வு ஒன்று இடம்பெற்றபோது, அதற்கு முன்னனி மென்பான நிறுவனமொன்று நிதியளிப்பு செய்திருந்தது.
இதனையடுத்து யஸ்மின் சூக்கா, குறித்த நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வா அங்கம் வகிக்கும் ஒரு இராணுவப்பிரிவுக்கு நிதியளித்த செயல் தொடர்பில் யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியிருந்தார்.
அவரின் இக்குற்றச்சாட்டையே இலங்கை இராணுவம் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.