முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிறிலங்கா படையினரின் நிலப்பறிப்புக்கள், கடல்வள சுரண்டல், பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
முற்றுமுழுதாக தமிழர் பூமியான முல்லைத்தீவு மாவட்டத்தை பெளத்த சிங்களம் முழுமையாக விழுங்குவதற்கு முன்னர் மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுமாறும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதி உச்ச இராணுவமயமாக்கல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதையும், அதேபோல மக்களிற்கு சொந்தமான பெருமளவு நிலங்களை சிறிலங்கா படையினர் கையகப்படுத்தியுள்ளனர் என்பதையும், மாவட்டத்தின் பொது அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதேபோன்று திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களுக்குரிய விவசாய நிலங்களை மாகாவலி எல் வலயம் என்று அடையாளப்படுத்தி சிங்கள மக்களிற்கு பறித்துகொடுக்கின்றனர் எனவும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அதேபோல் கடல்வளத்தையும் சுரண்டி வரும் நிலையில், மாவட்டம் படிப்படியாக விழுங்கப்பட்டு வருகின்றது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை மிகவேகமாக அழிக்கப்ட்டு கொண்டுவருகின்றது எனவும், மாவட்டத்தின் 73 கிலோமீற்றர் நீளமான கடற்பகுதியில் சுமார் 1400 தமிழ் மீனவர்களிற்கு சொந்தமான படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்சமயம் அந்த பகுதியில் 800 ற்கும் அதிகமான சிங்கள மீனவர்களின் படகுகள் கடற்றொழில் ஈடுபடுகின்றன என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக நாயாறு பகுதி மிகவேகமாக சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றது எனவும், இதனால் தமிழ் மீனவர்கள் கடலுக்குள் இறங்கமுடியாத நிலை காணப்படுகின்றது எனவும் கடற்றொழில் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
சுதந்திரமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வரும் வெளிமாவட்ட மீனவர்க்ள, தடைசெய்யப்பட்ட அத்தனை முறைகளையும் கையாண்டு தொழிலை செய்கின்றார்கள் எனவும், இதனால் எதிர்காலத்தில் இனமோதல்கள் கூட உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவை அச்சம் வெளியிட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் திட்டமிட்ட வகையில் மகாவலி எல் வலயம என்று அடையாளப்படுத்தப்பட்டு சுமார் 2,330 ஏக்கர் வரையிலான தமிழ் மக்களிற்கு சொந்தமான விவசாயநிலம் பறிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்றும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.