தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு புதிய முன்னணி அவசியம் எனவும், அதனால் மிக விரைவில் புதிய முன்னணி ஒன்று தோற்றுவிக்கப்படும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மாற்றுத் தலைமை ஒன்றினை வலியுறுத்தி வந்த நிலையில், இன்றைய சூழ்நிலையில் மாற்றுத் தலைமையின் அவசியம் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும், இலங்கைத் தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை முழுமையாக கைவிட்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமஸ்டி மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயங்கள் கைவிடப்பட்டுள்ளன எனவும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சரியான தலைமைத்துவமும், புதிய முன்னணியும் தேவை என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் எனவும், புதிய முன்னணி தேவை என்பதனை தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையில் எதேச்சதிகாரப் போக்கில் தான் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றார்கள் எனவும், கூட்டமைப்பிற்குள் விவாதங்கள் நடத்துவதில்லை என்பதுடன், ஓரிரு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகள் திணிக்கப்படுகின்றன எனவும் அவர் சாடியுள்ளார்.
தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகளை நிராகரிப்பது மாத்திரமன்றி, இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போன்று ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் தலைவர் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரமாட்டார் என்று சிங்கள தலைவர்கள் முத்திரை குத்தும் அளவிற்கு சம்பந்தனின் செயற்பாடுகள் உள்ளன எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு என்ன நடக்கப்போகின்றது என்று பாரிய கேள்வி இருக்கின்றது எனவும், எனவே தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய முன்னணி அவசியம் என்றும், மிக விரைவில் அவ்வாறான அமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்படும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.