யாழ்.குடாநாட்டில் சிறிலஙகா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களினில் நினைவேந்தல்களை வெளியே பொருத்தமான இடங்களில் செய்வதற்கு, ஏற்பாட்டுக்குழுக்கள் மும்முரமாக ஏற்பாடுகளினில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையினில் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் சிறில்ஙகா இராணுவப்படைத்தளமாக உள்ள நிலையில், அங்கு விதைக்கப்பட்டுள்ள மாவீரர்களிற்கான நினைவேந்தல் வல்வெட்டித்துறை தீருவில் நினைவு தூபி பகுதியில் நடைபெறவுள்ளது.
முன்னதாக மூத்த தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட போராளிகளது புகழுடல் இதே தீருவில் வளாகத்திலேயே தீயுடன் சங்கமாகியிருந்ததுடன், இதன் தொடர்ச்சியாக அங்கு பாரிய நினைவு தூபி அமைக்கப்பட்டிருந்தது.
அதேபோன்றே தீருவிலிலேயே பின்னதாக கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகளது நினைவிடமும் அமைக்கப்பட்டிருந்தது என்பதுடன், அங்கு தேசியத் தலைவர் அவர்கள் நேரடியாக வருகை தந்து அங்கு அஞ்சலி செலுத்துமியிருந்தார்.
இந்த நிலையில் மாவீரர்நாள் ஏற்பாட்டு குழு எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்கள் உள்ளிட்டவர்களது நினைவேந்தலை தீருவிலில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் இன்றையநாள் ஏற்பாட்டுக்குழு அனுசரணையுடன் தீருவில் நினைவு தூபி அமைந்திருந்த வளவு துப்புரவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தீருவில் நினைவு தூபி வளாகத்தை படைத்தரப்பு ஆக்கிரமிக்கப்பட்ட முற்பட்ட போதும், வல்வெட்டித்துறை நகரசபை போராடி அதனை தடுத்திருந்தது.
எனினும் தீருவில் வளவில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபிகள் சிறில்ஙகா படைகளால் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாவீரர் நாளை முன்னிட்டு வடமராட்சி வல்வெட்டித்துறை துயிலுமில்ல சிரமதானப் பணிகள் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மாவீரர் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த சிரமதான பணியினை முன்னெடுத்துள்ளனர்.