தனக்கென்று கட்சி ஒன்றில்லை எனவும், தன்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பயணிக்கலாம் எனவும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த தன்னை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் 5 கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது, மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமலிருந்தது எனவும், சேர்ந்த போதுதான் பலதும் தெரியவந்தது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான கொள்கைகளுக்கும், விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை உணர்ந்ததாகவும், கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது யதார்த்தமாகவே இருந்தது எனவும் அவர் விபரித்துள்ளார்.
இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வித கூட்டுக்கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டதாகவும், அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்திற்கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைககளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவிதான் ஒழுக்கம் என்ற பிரம்பு எனவும், தாங்கள் சொல்வதை செய்யுமாறும், இல்லையேல் அடுத்த முறை கட்சித் துண்டு கிடைக்காது என்று கட்சி உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதையும், தாங்கள் சொல்வதை மக்களுக்கு எடுத்துச் சென்றால் அடுத்த முறை தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்ற சலுகை முன்வைக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமஷ்டி ஒரு பூச்சாண்டியோ, பிரிவினையோ இல்லை என்பதையும், மாறாக அது மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுத்தியுள்ளார்.
எங்களுக்குள் சிங்களம் தெரிந்தவர்கள் இதனைச் செய்ய வேண்டும் எனவும், சிவாஜிலிங்கமும், தானும் அதனைச் செய்வதாகவும் தெரிவித்துள்ள அவர், அதேப் போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவையையும், அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக்கூற முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்முள் சிலர் எப்படி சமஷ்டியைக் கேட்பது எனவும், சிங்களவர்கள் அதற்கெதிரானவர்கள் என்றும் கூறுகின்றார்கள் எனவும், அவர்கள் தான் தெற்கில் இருந்துக்கொண்டு சிங்கள மக்கட் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள் என்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.