இலங்கையில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 45.58 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது.
இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 2372 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாமிடத்தில் உள்ளதுடன், 31.47 வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை 1620 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8.93 வீத வாக்குகளுடன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரையில் இந்தக் கட்சிக்கு 467 ஆசனங்களே கிடைத்துள்ளன.
ஜேவிபி 6.09 வீத வாக்குகளுடன், 298 ஆசனங்களைக் கைப்பற்றி நான்காவது இடத்தில் உள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இதுவரையில், 3.21 வீத வாக்குகளுடன், 287 ஆசனங்களைக் கைப்பற்றி அடுத்த நிலையில் உள்ளது.
தென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அலையே வீசுவதாக வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் இலங்கை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள், தெற்கில் நல்லாட்சி எனப்படும் கூட்டு அரசிலும், வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சியிலும் மக்கள் வெறுப்படைய ஆரம்பித்துள்ளதனை காட்டும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது. அள்ளிக்கொடுத்த உதவிகள், கிள்ளிக்கொடுத்த பணம் என்று அனைத்தினையும் தாண்டி தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கு யாழ்ப்பாணத்தில் இம்முறை வாக்களித்துள்ளனர்.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி, இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி வசம் இருந்த வட்டாரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட வேறு கட்சிகள் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்களுடைய தொகுதியில் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபைகளுக்கு உட்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருந்த வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் அவைத் தலைவர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடைய தொகுதிகளில் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது வெற்றியினை பதிவு செய்துள்ளது.
யாழ்.மாநகர சபையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி வெற்றி பெற்ற வட்டாரங்களில்
புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பாலான இடங்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய கட்சிகளும், தேசியக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் விகிதாசார ஒதுக்கீட்டில் கணிசமான ஆசனங்களை வென்றுள்ளன.