சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமர் பதவிக்கு தெரிவு செய்து, சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராகி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, சனாதிபதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தனக்கு அறிவித்துள்ளதாகவும் நாளையநாள் வரை அவர்களுக்கு காலஅவகாசத்தை வழங்க தான் தீர்மானித்துள்ளதாகவும் சனாதிபதி, பிரதமரிடம் கூறியுள்ளார்.
இதற்கு சனாதிபதியிடம் பதிலளித்த பிரதமர், தான் தற்போது பிரதமராக பதவி வகிப்பதால், புதிதாக பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க போவதில்லை என்று கூறியுள்ளதுடன், முடிந்தால் நாடாளுமன்றத்தில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறும், அவ்வாறு முடியாது போனால், தான் செய்ய போவதை வெள்ளிக்கிழமைக்கு பின்னர் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் சனாதிபதியிடம் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாளை மற்றும் நாளை மறுதினம் சனாதிபதி, ஊடகங்களில் பிரதானிகளுடனான சிறப்பு சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளதாக சனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் சனாதிபதி நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் சனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.