பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்புகளை கனடா ஏற்படுத்தவுள்ளது.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது இதற்கான உத்தரவாதத்தினை வழங்கியுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பழங்குடியின மக்களுடனான சமரச முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்று கூறியுள்ளார்.
கனடாவின் பழங்குடியின மக்களுக்கும் கனேடிய அரசாங்கத்திற்கும் இடையே உறவுகளில் காணப்படும் பிணக்குகளை சரிசெய்வதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், பழங்குடியின மக்களுடன் இணைந்து, அவர்களுக்கான “உரிமை சார் முறைமையின்” அடிப்படிடையில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கான உறுதிப்படுத்தல்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள போதிலும், கடந்த பல தசாப்தங்களாக அவற்றை முன்னிறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக முன்னைய அரசாங்கங்கள் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சரியான விதத்தில் செயற்படவில்ல எனவும் சாடியுள்ள அவர், பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி, அவற்றை முற்று முழுதாகவும், அர்த்தபூர்வமாகவும் நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பினை ஏற்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் மூலம் பழங்குடியின மக்கள் தமக்கான எதிர்காலம் குறித்த முடிவுகளை அவர்களே மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் இந்த நடைமுறை அரசாங்கத்தின் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்