டெல்லியில் உள்ள டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் ‘பரீக்ஷா பே சர்ச்சா’ (தேர்வுகள் தொடர்பான விவாதம்) என்னும் நிகழ்ச்சிக்கு இன்று பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ-மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன் மனஅழுத்தத்தை வென்று, தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி உரையாற்றிவருகிறார்.
வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்க்கு வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார். “ மொழி தடையால் தொடர்பு கொள்ள முடியாத மாணவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். ஒரு மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக தமிழ்.. பழமையான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது. நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது தமிழ் மொழியாகும்” என மோடி மாணவர்களிடையே பேசினார்.