தமிழர் தாயகத்தில் சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் அமைதிப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 365 நாட்கள் நிறைவடைந்ததையிட்டு, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய போராட்டத்தின்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, குருகுலராஜா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஒரு ஆண்டு கடந்த நிலையில் 366 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதனை இலங்கை சனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில், அனைத்துலக விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
தமது பிள்ளைகள் வருவார்கள் என்று காத்திருந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 7 தாய்மார் இதுவரை உயிரிழந்துள்ளமை அனைத்துலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேவேளை காணாமலாக்கப்பட்டோர் இலங்கையில் எங்கும் இல்லை என்று இல்ஙகை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.