பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகையில் எச்சரித்திருந்தார்.
இதுதொடர்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.
எனினும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக அவரது இடைநிறுத்தத்தை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்ததுடன், அவர் தொடர்ந்து அங்கு தனது பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தார்
இந்தநிலையில் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ இன்று கொழும்புக்குத் திரும்புகிறார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும்அவர் திருப்பி அழைக்கப்பட்டமைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.