எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணம், வடமாகாணம் மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாக உள்ளநிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாண சபைகள் ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ளதாகவும், தாமதமின்றி தேர்தல்களை நடாத்துவதே தமது பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தொகுதிவாரி அடிப்படையில் தெரிவான மொத்த உறுப்பினர்களில் 10 வீதமானவர்கள் பெண்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1.9 வீதமான பெண்கள் மட்டுமே வெற்றியீட்டியிருந்தனர் எனவும், இம்முறை அதிகளவில் பெண்கள் தெரிவாகியுள்ளதாகவும், விகிதாசார முறையில் இம்முறை மேலும் பெண்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு உள்வாங்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.