வடமாகாணசபையின் 117வது அமர்வு இன்று அவைத்தலைவர் சிவஞானம் தலைமையில் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இடம்பெற்ற போது, வடமாகாண சபையின் உறுப்பினர்களாக புதியவர்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் முகமாக தனது மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய இம்மானுவேல் ஆர்னோல்ட்டுக்கு பதிலாக, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் சபாரட்ணம் குகதாஸ் என்பவர் இன்று உறுப்பினராக பதிவயேற்றார்.
அத்துடன் கடந்த மாதம் பதவி விலகிய முஸ்லிம் காங்கிரசின் மன்னார் மாவட்ட உறுப்பினர் மொஹம்மம் றைசிற்கு பதிலாக, அந்தக்கட்சி சார்பில் அப்புல் நியாஸ் சினி மொஹம்மட் என்பவரும் வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக அவைத் தலைவரினால் அறிவிக்கப்பட்டதுடன் சபை அமர்வுகளில் இவ்விருவரும் பங்குபற்றி உரையாற்றினர்.
இவ்வாறான நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் சபாரட்ணம் குகதாசின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவைத்தலைவரை கோரியுள்ளார்.
சபாரட்ணம் குகதாஸ் தனது முதலாவது உரையில், வன்னி இறுதி போரில் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், போர்குற்ற மீறல்கள், முகாம் வாழ்க்கை இராணுவ அதிகார மீறல்கள் என்பன தொடர்பில் விபரித்தார்.
அவரது உரையை அடுத்து, உறுப்பினரின் உரையில் பல விடயங்களை தெரிவித்துள்ளார் எனவும், இறுதி போரின் ஒரு சாட்சியமாக தனது உரையை சபையில் நிகழ்த்தி உள்ளார் என்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பாராட்டியு்ளார்.
அத்துடன் இந்த உரையின் பிரதியினை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளுருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவைத்தலைவர் சிவஞானத்திடம் முதலமைச்சர் கோரினார்.
அதனை அடுத்து அவைத்தலைவர், உறுப்பினரின் உரையை அனுப்புவதில் எந்த தடையும் இல்லை எனவும், உரையின் பிரதி மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.