இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு 8 மணியில் இருந்து இன்று காலை 9 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், மெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசத்தில் நேற்றிரவு தாக்குதல் நடத்த முயன்ற நூற்றுக்கணக்கானோரைக் கொண்ட குழுவின் மீது சிறிலங்கா காவல்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர்.
வத்தேகம பகுதியிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது நள்ளிரவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், சில வாணிப நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
எனினும் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, இன்று அதிகாலை 1 மணியளவில் அங்கு சென்றிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மடவளைப் பிரதேசத்திலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கும் இராணுவத்தினரும், காவல்துறையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காவல்துறைமா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய பிரதி காவல்துறைமா அதிபர் மூத்த காவல்துறை அத்தியட்சகர்கள் அடங்கலாக மூவர் அடங்கிய மூன்று குழுக்கள் கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கண்டி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கண்டி நிர்வாக மாவட்டத்துக்குட்பட்ட பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரும் வரை இன்று காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்து்ளளது.
இதனிடையே மாத்தளையின் அம்பதென்னைப் பகுதியிலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.