(மார்ச் 8-ந்தேதி) சர்வதேச மகளிர் தினம்.
இந்த தினம் ஏன் வந்தது? யாரால் தொடங்கப்பட்டது? என்பது போன்ற விவரங்களைவிட இந்த நாளில் நாம் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்.
முதலில், பெண்கள் தாங்களும் இவ்வுலகில் வாழ்வதற்கு, சாதிப்பதற்கு உரிமையுண்டு என உணரவேண்டும். பெண்கள் முன்னேற்றம் என்பது சவால்கள் நிறைந்த ஒன்றுதான். ஆண்களுக்கு இவ்வுலகில் ஆயிரம் சவால்கள் இருந்தால், பெண்களுக்கு ஆயிரத்துடன் சேர்த்து இன்னொரு சவாலும் உண்டு. அது, ஆண்கள் என்கிற மிக முக்கியமான, பெரிய சவால்.
இரண்டாவதாக, ஆண்கள் பெண்களைக் குறித்த அவர்தம் மனப்பாங்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். தனக்கு சேவை செய்யவே தாயாக, தாரமாக, மகளாக பெண் அவதரித்திருக்கிறாள் என்கிற தவறான எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டும். பிறக்கும்போது குழந்தை குணத்தில் ஆண், பெண் என்ற எந்த தன்மையும் இன்றி சாதராணமாகத்தான் பிறக்கிறது. வளரும் சூழ்நிலை, திணிக்கப்படும் கருத்துகள் ஆண், பெண் குணங்களை மனதில் விதைக்கிறது.
‘சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை’, ‘ஆம்பளையா வீரமா நில்லு; பொம்பள மாதிரி அழாதே’, ‘பொட்டப் புள்ள உனக்கு என்ன வேடிக்கை’ என்பது போன்ற சொல்லாடல்களும், ஆண் குழந்தைக்கு வாங்கித் தரும் கரடு முரடான விளையாட்டுப் பொருட்களும், பெண்ணுக்கு வாங்கித் தரும் மென்மையான பொம்மைகளும், அவர்களிடையே சிறு வயதிலிருந்தே ஆண், பெண் என்கிற பாகுபாட்டினை ஏற்படுத்தி விடுகிறது.
பெண் என்றால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, சமைப்பது, குழந்தைகளை பராமரிப்பது என்றும், ஆண் என்றால் வெளியில் செல்வது, சம்பாதிப்பது என்றும் வரையறுப்பது பெண்களுக்கு பாதகமாக முடிகிறது.
காலம் முழுவதும் அம்மாவால் பராமரிக்கப்பட்டு சமையலறை பக்கமே செல்லாத ஆண் திருமணம் ஆனவுடன், அம்மா செய்த அத்தனை வேலைகளையும் மனைவியிடம் எதிர்பார்க்கிறான். குழந்தைகளோடு சேர்த்து கணவனுக்கும் சேவை செய்வது பெண்ணின் பெருங்கடமையாகி விடுகிறது. ஆண்டுதோறும் பள்ளி இறுதி தேர்வில் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது மாணவியர்கள். கல்லூரிகளில் படித்து சிறப்பான மதிப்பெண்கள் பெற்று பெரிய நிறுவனங்களில் வேலைப் பெறுவது, பணியிடத்தில் பணி உயர்வு பெற்று முன்னேறுவது என எங்கும் பெண்கள் வெற்றி பெறுகின்றனர்.
ஆனால், ஒரு கட்டத்தில், தங்கள் வேலையா? குடும்பமா? என்கிறபோது ஆசையும் கனவுகளும் சிதைக்கப்பட்டு மீண்டும் பிள்ளைகள், வயதான பெற்றோர்களை பேணுதல் என்கிற வட்டத்திற்குள் சிக்கிவிடுகின்றனர். உலகில், சாதி, மதம், இனம் கடந்து எல்லா மக்களிடம் காணப்படும் பொதுவான ஒரு கருத்து பெண்களுக்கு, ஆண்களைவிட அறிவு கம்மி என்பது. வளர்ந்த முன்னேறிய மேலைநாடுகளில் கூட மருத்துவம், விஞ்ஞானம் போன்ற படிப்புகளுக்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என்கிற கீழான எண்ணம் சமீப காலங்கள் வரை இருந்தது. பெண்களுக்கு, வாக்குரிமை, சொத்துரிமை போன்றவைகள் சென்ற நூற்றாண்டில்தான் பெறப்பட்டது.ஒரு ஆணை குழந்தையில் இருந்து உருவாக்குவதில் பெண்ணின் பங்கு பெருமளவில் உள்ளது. தனது மகன்களுக்கு, பெண்களை மதிப்பதற்கும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் சொல்லித் தரவேண்டும். நமது கல்வித் திட்டத்திலும் பெண்களை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடத்திட்டங்கள் அமைக்க வேண்டும்.
கல்வியறிவில் முதன்மையாக விளங்கும் கேரளா தற்போது பனிரெண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம் 34-வது இடத்தில் உள்ளது.
அறிவிலும் எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் ஆண், பெண் பாகுபாடு இல்லையென்றாலும், உடல்ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்களும், பிரச்சினைகளும், குறிப்பாக, ஹார்மோன் மாற்றங்களை ஆண்களும் பெண்களும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் மீதான மதிப்பு கூடும். குற்றங்களும் குறையும். மகளிர் ஆணையங்களும், மகளிருக்கான சட்டங்களும் மட்டுமே போதிய மாற்றத்தை உண்டாக்கிவிட முடியாது.
ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் தினத்திற்கு ஒரு கருத்தினையேற்று அதன் அடிப்படையில் ஆண்டு முழுவதும் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்து, ‘முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடு’ என்பதாகும்.
ஒரு சமுதாயம் முழுமையான மேம்பட்ட சமுதாயமாக மாறவேண்டுமானால், ஆண்களும், பெண்களும் சரிசமமாக பங்கு கொள்ளவேண்டும். பெரியார் பிறந்த இம்மண்ணில் அத்தகைய மாற்றத்திற்கு வழி காணுவோம். பெண்களின் முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடுப்போம்.