ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவா வில் நடைபெற்றுவருகின்ற நிலையில், எதிர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நடைபெறவுள்ளது.
ஜெனிவாவில் இம்முறை இரண்டு விவாதங்கள் இலங்கை தொடர்பில் நடைபெறவுள்ள நிலையில், அவற்றுள முதலாவது விவாதமே எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகால நீடிப்புக்கு உட்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் செயலாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றதுடன். அதன்போது இலங்கை குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
அந்த அறிக்கையில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அவை திருத்தங்ளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன.
வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்பதுடன், வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரேரணையை முழுமையாக நடைமுறைபடுத்தவெண்டும், காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு சுயாதீன ஆணையாளர்களை நியமிக்கவேண்டும் என்பதுடன், அந்த அலுவலகத்துக்கு தேவையான வளங்கள் வழங்கப்படுவதுடன், சரியான அதிகாரிகளும் நியமிக்கப்படவேண்டும் ஆகிய விடயங்கள் இலங்கை குறித்த அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இதற்கு முன்னர் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படவேண்டும் எனவும், காணாமல் போதல்கள் – தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் என்பன தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிபடுத்தவேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை உறவினர்களுக்கு வழங்குமாறும், போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக உதவிகளை பெறவேண்டும் என்பதுடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அனைத்துலக உதவியுடன் நம்பகரமான – பாதிக்கபட்ட மக்களை கேந்திரமாக கொண்ட பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும் எனவும், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் என்பனவற்றை நியமிக்கவேண்டும் எனவும், வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதுடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இலங்கை குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் வௌ்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமர்வில், முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உரையாற்றுவார் என்பதுடன், ஏற்கனவே இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் கருத்து வெளியிடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் சார்பில் தூதுக்குழுவின் தலைவர் உரையாற்றுவார் என்ற நிலையில், குறிப்பாக வௌ்ளிக்கிழமை விவாதத்தில் ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.