காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, யாழ். வடமராட்சி கிழக்கு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் ஒரு ஆண்டை எட்டுகின்றது.
இதனை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை மாபெரும் கண்டனப் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் அமைப்பினர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை முன்னிட்டு குறித்த அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய தாங்கள் நாளாந்தம் தொடர்ச்சியாக போராடி வருவதாகவும், இதனை தமது அரசியல் தலைமைகள் கவனிக்காத நிலையே நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் இடம்பெற்றுவரும் அமர்வுகளின் போது, இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள், படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுத்துமாறு வலியுறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் போர்க்குற்ற விசாரணை அனைத்துலகப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டு, பாதிக்கப்பட் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த நிலையில், இந்தப்போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்து்ளளனர்.