முத்தரப்பு டி 20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேசம் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 18-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.
இந்திய அணி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்த சூழ்நிலையில் தான் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் தொடரை நடத்தும் இலங்கை, வங்கதேச அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. இரு அணிகளும் ஏற்கெனவே தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இலங்கைக்கு எதிராக 215 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி கண்டுள்ளதால் வங்கதேசம் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷாகிப் அல் ஹசன் அணியுடன் இணைந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கும் பட்சத்தில் வங்கதேச அணி கூடுதல் பலம் பெறும். அதேவேளையில் வங்கதேச அணிக்கு பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது இலங்கை அணி.