நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் புனித பத்திரீசியார் கல்லூயில் பழைய மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை இன்று திறந்துவைத்து உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்போது அடுத்த சனாதிபதி யார், அடுத்த பிரதமர் யார், என்ற போட்டியுடன் சிலர் செயற்பட்டு வருகின்றனர் எனவும், அவர்களுக்கு நாட்டின் மீது அக்கறை இல்லை என்றும் கூறியுள்ளார்.
மாறாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இன ரீதியான பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதே அவர்களது இலக்கு எனவும், இதில் மக்களும் ஏமாற்றப்படுகின்றனர் எனவும் தெரிவித்துளள அவர், அவ்வாறானவர்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது, உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதன் ஊடாக, சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், உள்நாட்டுக்கு மாத்திரம் இன்றி, முழு உலகத்துக்கும் தலைவராக முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தற்போது தனி நாட்டைக் கேட்கவில்லை எனவும், தங்களது பிரச்சினை பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்க்க வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என்றும், ஆனால் தமிழ் மக்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும், நாட்டை இப்படியே கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு மிகப்பெரிய துன்பங்களையும், பொருளாதார ரீதியான பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது எனவும், இலங்கையை விட பின்தங்கி இருந்த பல நாடுகள் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளன எனவும், உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்றும் அவர் கூறியுளளார்.
தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் சனாதிபதிக்கு இருக்கிற போதிலும், அவருக்கு இந்த விடயத்தில் இருக்கும் சவால்களை சமாளித்து, தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு சனாதிபதி செய்வாராக இருந்தால், அனைத்துலக சமுகம் அவரை உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என்று அங்கீகரிக்கும் எனவும் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனரீதியான புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கு, இணைப்பு மொழியில் பாண்டித்தியம் பெறுவது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தங்களது உரைகளின் போது முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தி இருப்பதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறுதி போரின்போது சரணடைந்து காணாமலாக்கப்பட்ட புனித பத்திரிசியார் கல்லூரின் முன்னாள் அதிபர் அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, இன்று புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு பயணம் மேற்கொண்ட சனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சார்பாக மூவரை சனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவித்து காவல்துறையினர் அழைத்துச் சென்றிருந்த போதிலும், அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் சனாதிபதி சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சனாதிபதியை உடனடியாக யாழிலிருந்து வெளியேறுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.