ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் கேள்விகளை எழுப்பி குழப்பியதால், உபகுழுக்கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டதுடன் குறிப்பிட நேரத்திற்கு முன்தாகவே கூட்டம் நிறைவடைந்தது.குறிப்பாக சரத் வீரசேகர தலைமையிலான எலிய அமைப்பின் பிரதிநிதிகள், உபகுழுக்கூட்டத்தை வழிநடத்திய சர்வதேச பிரதிநிதியான போல் நியூமனுடன் முரண்பட்ட நிலையிலேயே கூட்டம் சர்ச்சைகளுடன் நிறைவுக்கு வந்தது. சர்வதேச மனித உரிமை அமைப்பொன்றின் முக்கியஸ்தரான போல் நியூமன் தலைமையில் இலங்கை மனித உரிமை நிலைமையில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற விசேட உபகுழுக்கூட்டம் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த உபகுழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ்ப்பாணத்தில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தென்னிலங்கையின் எலிய அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் முதலில் உரையாற்றிய யாழ். மனித உரிமை செயற்பாட்டாளர் மணிவண்ணன் குறிப்பிடுகையில்- காணாமல்போனோர் குறித்து ஆராய காணாமல்போனோர் அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ளது. அதில் மக்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியையும் பொலிஸ்மா அதிபரையும் சந்தித்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே காணாமல்போனோர் அலுவலகம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் என்று நாங்கள் நம்பவில்லை. அரசியல் தீர்வும் கிடைக்காத நிலைமையே காணப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டமும் இன்னமும் நீக்கப்படவில்லை. காணிகளும் விடுவிக்கப்படவில்லை. காணாமல்போனோர் தொடர்பில் பரணகம குழுவிடம் 24 ஆயிரம் முறைப்பாடுகள் உள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் 16 ஆயிரம் முறைப்பாடுகள் உள்ளன. மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நாம் நம்பவில்லை என்றார்.
இதனையடுத்து பாதிரியார் ஜெயபாலன் குரூஸ் உரையாற்றுகையில், இன்று ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருக்கின்றார். அவர் அங்கு சென்றபோது காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒருசிலர் ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டும் அவர் மறுத்துவிட்டார். எனவே இங்கு நீதியை எதிர்பார்க்க முடியாது என்றார்.
இதனையடுத்து உரையாற்றிய எலிய அமைப்பின் பிரதிநிதியான சரத் வீரசேகர இங்கு காணாமல்போனோர் தொடர்பில் அனைவரும் இராணுவத்தையே குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் புலிகள் எந்தளவான மனித உரிமை மீறல்களை செய்தனர். சிறுவர்கள் கடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். புலிகள் கொலைகளை செய்தனர். ஆனால் இராணுவம் மனித உயிர்களை காப்பாற்றியது. புலிகள் சிறுவர்களை கடத்தியமை தொடர்பில் நீங்கள் அறிவீர்களா என்று உபகுழுக்கூட்டத்தை தலைமை தாங்கிய போல் நியூமனைப்பார்த்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த போல் நியூமன் இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளிப்பார் என்றார்.
இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலிகள் சிறுவர்களை ஆட்சேர்ந்தமை தொடர்பில் ஐ.நா.வுடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டதுடன் அது தொடர்பில் விளக்கமொன்றை அளித்தார். இதன்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய சரத் வீரசேகர தான் இந்தக்கேள்வியை உபகுழுக்கூட்டத்தை நடத்திய போல் நியூமனிடமே கேட்டதாகவும் அதற்கு கஜேந்திரகுமார் எவ்வாறு விளக்கமளிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இவ்வாறு பக்கச்சார்பான முறையில் போல் நியூமன் உபகுழுக்கூட்டத்தை நடத்த முடியுமா என்றும் கூறினார். இதனையடுத்து கருத்து வெளியிட்ட போல் நியூமன் நான் எனது கடமையை செய்கின்றேன். நீங்கள் அதில் தலையிட வேண்டாம். இதனையடுத்து போல் நியூமனுக்கும் சரத் வீரசேகர தரப்பிற்கும் முரண்பாடு ஏற்பட்டது.
மேலும் சிறிதரன் எம்.பி.யும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்க முயன்றார். எனினும் சரத் வீரசேகர போல் நியூமனுடன் முரண்பட்டதால் உபகுழுக்கூட்டம் முரண்பாடுகளுடன் நிறைவடைந்தது.