முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய மூன்று கிராமங்களின் ஆறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 13 கிலோ மீற்றர் நீளமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும், 2 ஆயிரம் தமிழ் மக்களையும் மகாவலி அதிகார சபை உள்வாங்கும் திட்டத்துக்கான ஏற்பாடுகள் மாவட்டச் செயலகத்தில் நேற்று அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
வடமாகாண ஆளுநர் , மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் கூட்டுத் தலைமையில், மாவட்ட முப்படைகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக பணியாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் கிராமங்களில் கடற்கரையோரத்தில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 276 சிங்களக் குடும்பங்களும் தங்களுக்குப் பிரதேச செயலாளரால் வீட்டுத் திட்டம் மற்றும் வீதிச் சீரமைப்புப் பணிகளில் புறக்கணிக்கப்படுகின்றோம் என்று சுட்டிக்காட்டி, மகாவலி அதிகாரசபை மற்றும் வெளி ஒயா பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் இந்தப் பகுதிகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததை அடுத்தே, இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறப்படுகின்றது.
அந்தக் கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் நிலையில், 276 குடும்பங்களுக்காக தமிழர் பிரதேசத்தை சிங்கள மயமாக்க முயற்சி எடுக்கப்படுகின்றது விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் சார்பில் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடும் அதிருப்தியை வெளியிட்ட போதிலும், அவை எவையும் கவனத்தில்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் மட்டத்திலும், கொழும்பு மட்டத்திலும் ஏற்கனவே இரகசியமான முறையில் எட்டப்பட்ட தமது தீர்மானத்தைத் திணிக்கும் வகையிலேயே கூட்டம் நடைபெற்றது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மாவட்ட செயலரின் கருத்தை அறிவதற்காக பல தடவை தொலைபேசி அழைப்பை ஊடகங்கள் மேற்கொண்டபோதிலும், அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.