இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான் இப்போது நிறுவனங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறது.
அமெரிக்க தேர்தல் முதல் இந்திய தேர்தல் வரை இந்த தரவுகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் தரவுகளை தவறாக பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள், நமது `ஃபேஸ்புக்` தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
சரி… ஃபேஸ்புக்கில் நமது தகவல்களை காப்பது எப்படி?
நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்?
நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்? நீங்கள் எந்த நடிகரை போல உள்ளீர்கள் என்பது போன்ற புதிர்கள் நமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது தோன்றும். நாமும் அதில் ஆர்வமாக பங்கேற்போம். நமது தரவுகள் பெரும்பாலும் களவு போவது இங்கிருந்துதான்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இது போன்ற ஒரு புதிர் போட்டியின் மூலமாகதான் ஏறத்தாழ 5 கோடி மக்களின் தரவுகளை அறுவடை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த புதிர் போட்டிகள் பயனாளிகளை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இது போன்ற புதிர்போட்டிகள்,’உங்களது தரவுகள் காக்கப்படும்` என்று உறுதி தரும். ஆனால், நம்மை அறியாமலே நாம் அவர்களுக்கு தரவுகள் கொடுத்து கொண்டிருப்போம்.
மூன்றாம் நபர் (third party), இதுபோல தரவுகளை எடுக்க முடியாத வண்ணம் ஃபேஸ்புக் இப்போது தமது சட்டத் திட்டங்களை மாற்றி உள்ளது.
எப்படி நமது தரவுகளை பாதுகாப்பது?
ஃபேஸ்புக்கை லாக் இன் செய்யுங்கள். ஆப் செட்டிங் பக்கத்தை பாருங்கள்.
பின், ஆப், வெப்சைட்ஸ் மற்றும் பிளகின் கீழ் இருக்கும் எடிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
பின், disable பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இது மூன்றாவது நபர்கள் (Third Party) நமது தரவுகளை கையாள்வதை தடுக்கும்.
ஃபேஸ்புக்கை செயலிழக்க செய்தல்
ஃபேஸ்புக் நமக்கு அலுப்புத் தட்டினால், நாம் தற்காலிகமாக அதை சில காலம் செயலிழக்க செய்யல்லாம். அந்த வாய்ப்பை நமக்கு ஃபேஸ்புக் வழங்குகிறது. ஆனால், நம்மை குறித்த பல தகவல்கள் அப்படியேதான் இருக்கும்.
செய்யக் கூடாதவை:
பெரும்பாலும் பொருட்கள் விற்கும் நிறுவனங்களின் பக்கத்தை, ‘லைக்’ செய்வதை தவிருங்கள்.
நீங்கள் புதிர்போட்டி விளையாட விரும்பினால், ஃபேஸ்புக்கை `லாக் அவுட்` செய்வதை தவிருங்கள்.
இவை கிழக்கு ஆங்கிலியா சட்டப்பள்ளியின் பேராசிரியர் பால் பெர்னல் சொல்லும் வழிமுறைகள்.