யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகியுள்ளார்.
மாநகரச சபையின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்ற போது, தலைவர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி முதலாம் வாக்கெடுப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்டுக்கு 18 வாக்குகளும், ஈ.பி.டி.பியின் முடியப்பு ரெமீடியஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆகிய இருவருக்கும் தலா 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
ஒரே அளவான வாக்குகளைப் பெற்ற விஷ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் முடியப்பு ரெமீடியஸ் ஆகியோரில், குழுக்கள் முறையில் ரெமீடியஸ் தெரிவு செய்யப்பட்ட போதிலும், முதல்வருக்கான போட்டியில் இருந்து அவர் விலகினார்.
இதனை அடுத்து வாக்கெடுப்பு இன்றி இமானுவேல் ஆர்னோல்ட், யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் யாழ்ப்பாண மாநகர துணை முதல்வராக துரைராசா ஈசன் தெரிவாகியுள்ளார்.