போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவா மனித உரிமை பேரவைக்குச் சென்று இலங்கை அரசாங்கம் பதில் வழங்கும் நிலைமை மாற வேண்டும் எனவும், இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில், ஜெனீவா சென்ற இலங்கை தூதுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர் என்ற வகையில் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
ஜெனீவாவில் தமது நல்லிணக்க மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டாலும், இலங்கை தரப்பில் தமது நிலைப்பாட்டை தாம் ஆணித்தரமாக முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட சகல விடயங்களையும் தாம் ஏற்கவில்லை என்று கூறிய அவர், வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைத்து வழக்கு விசாரிக்க தாம் எந்த உடன்பாடும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க எந்த வாய்ப்பும் கிடையாது எனவும், இலங்கையின் யாப்பிற்கு உட்பட்டதாகவே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பல்வேறு முன்னெடுப்புகளுக்கான பிரயத்தனங்களை எடுத்திருப்பதை அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், இவற்றை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது எனவும், ஆனால் இலங்கையின் நீதித்துறை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் ஊடாகவே அநேக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகள் கூறுவது போல அனைத்தையும் செய்ய முடியாது எனவும், எனவே தமது நிலைப்பாட்டை ஜெனீவாவில் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் சரத் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.