ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த 10 லட்சத்துக்கும் அதிகமான பயங்கரவாதம் தொடர்புடைய கருத்துகளை நீக்கி அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில், “2018 மற்றும், 2017 ஆம் ஆண்டில் ஐஎஸ் மற்றும் அல்கய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் சார்ந்து பதிவிடப்பட்டிருந்த சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்கருத்துகள் அனைத்தும் அப்பயனாளர்கள் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 2018 -ல் மட்டும் இந்தத் தொழில்நுட்பம் மூலம் 6 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.
தீவிரவாத அமைப்புகள் எப்போது எங்கள் தளத்தில் எல்லை மீறுகின்றன. எனவே இதை தடுப்பதற்கு நாங்கள் எங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைத் திரட்டி மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
பயனாளர்களின் நம்பிக்கையை ஃபேஸ்புக் நிறுவனம் இழந்துவிட்டது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் தீவிரவாதம் தொடர்பான கருத்துகள் மீது அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது