இதுவரை காலமும் கஞ்சா போதைப் பொருளை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், அதனை சட்டபூர்வமாக பயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
C-45 எனப்படும் இந்தச் சட்டம் நேற்று கனேடிய செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அதற்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 29 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதனை அடுத்து குறித்த சட்டம் தற்போது கனடாவில் முழுமையான அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து உற்சாகத்திற்காக கஞ்சாவினைப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம் அனுமதிக்கின்றனது.
அத்துடன் கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது.
அதுமட்டுமின்றி ஜி7 நாடுகளில் கஞ்சாவை உற்சாக பயன்பாடுக்கு அனுமதிக்கும் முதல் நாடு என்ற பெயரையும் இதன்மூலம் கனடா பெற்றுள்ளது.
1923-ஆம் ஆண்டில் கனடாவில் கஞ்சா வைத்திருப்பது குற்றசெயலாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல், மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று இநதச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து தனது கீச்சபப் பதிவினூடாக கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நமது பிள்ளைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது எனவும், அதேபோல் சமூக குற்றவாளிகள் இலாபம் சம்பாதிக்கவும் இது காரணமாக அமைகிறது என்றும், இந்தச் சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.