அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பினை அடுத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் நடப்பிற்கு வருகின்றன.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்ற பொருட்கள் உள்ளடங்கலாக 2.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்துள்ளது.
இந்த வரி விதிப்புக்கள் தொடர்பில் வியாழக்கிழமை டப்ளின் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்க, ஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு தர்க்கத்திற்கு எதிராக உள்ளது என்றும், தங்களின் பதில் நடவடிக்கை தெளிவாக ஆனால் சரியான அளவில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் வரி விதிப்பினை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டுமோ, அதை தாங்கள் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கையாக கனடா, சீனா, மெக்சிக்கோ, இந்தியா ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டுக்கு இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.