சுற்றுலா மையங்களினால் பெறப்படும் வருமானங்கள் ஊடாக வடபகுதி அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர, அந்த வருமானங்களை இலங்கை மத்திய அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது என்று நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென் ப்ரோலிச் ஹொல்றேவிடம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென் ப்ரோலிச் ஹெர்றே மற்றும் அவரது குழுவினர் இன்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின் நிறைவில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், புலம்பெயர் தமிழர்கள் யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்டதுடன், புலம்பெயர் மக்களின் விரும்பம் தொடர்பாக என்னுடைய கருத்தினை நோர்வே அமைச்சர் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்கள் வடக்கில் வேலைத்திட்டங்களை செய்வதில் எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை என்பதுடன், புலம்பெயர் மக்களின் ஆதரவு அவசியம் எனவும், வடக்கில் தொழில்நுட்ப நிலையம் ஒன்றினை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், வடமாகாண முதலமைச்சரின் நிதி நியதிச் சட்டத்தினையும் ஏற்றுக்கொண்டால், புலம்பெயர் மக்களின் நிதிகளைப் பெற்று வடக்கில் பல வேலைத்திட்டங்களை செய்ய முடியும் என்ற போதலும், இன்னும் வடமாகாண முதலமைச்சர் நிதி நியதிச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படால் உள்ளது என்பதை நோர்வே அமைச்சருக்கு தாம் தெரிவித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள கரையோரப் பகுதிகள் மிக அழகாக இருப்பதாகவும், அவற்றை வலுவுள்ள சுற்றுலா மையங்களாக மாற்ற முடியுமென்றும் நோர்வே வெளியுறவு அமைச்சர் கூறிய நிலையில், தானும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும், தமிழ் மக்களின் பாரம்பரியங்கள் பாதிக்கப்படாமல், சுற்றுலா மையங்கள் அமைக்க வேண்டுமென்பதில் கரிசனையுடன் இருப்பதுடன், வருமானத்தினை பார்க்காமல் சுற்றுலா மையங்கள் அமைக்கவில்லை என்றும், அரசாங்கம் அவ்வாறான நிலைப்பாட்டில் தான் இருப்பதாக எடுத்துக்கூறியதாகவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வடக்கில் இருந்து எவ்வளவு வருமானம் வரும் என்பதே அவர்களின் கரிசனை என்றும், எனினும் தங்களைப் பொறுத்தவரையில் மக்களின் வாழ்க்கை நிலைகள் மாற்றப்படாத நிலையில் இவைகள் நடைபெற வேண்டுமென்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சரிடம் விளக்கியதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் மதெரிவித்துள்ளார்.