ரொரன்ரோவில் இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு தேடுதல்களில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 800 அதிகாரிகள் களத்தில் இறங்கி மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, அனைத்துலக அளவில் தொடர்புகளைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் தெருச் சண்டியர் குழுக்களைச் சேர்ந்த பலர் சிக்கியுள்ளதாக ரொரன்ரொ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்பது மாதங்களின் முன்னர் தொடங்கப்பட்ட ஒரு விசாரணையின் தொடர்ச்சியாகவே இன்றைய இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், “ஃபைவ் பொயின்ட் ஜெனரல்ஸ்”(Five Point Generalz) எனப்படும் குழுவுடன் தொடர்புடைய பெருமளவானோர் இதன்போது கைது செய்யப்பட்டதாகவும் ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் செளண்டர்ஸ்(Mark Saunders) தெரிவித்துள்ளார்.
மிகவும் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தமது விசாரணை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இன்று முன்னெடுக்கப்ப்டட இந்த அதிரடிக் கைதுகளின் மூலம், குறித்த அந்த குழுவின் கட்டமைப்பும் நடவடிக்கைகளும் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரொரன்ரொவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இந்தக் குழு இருந்துள்ளதாகவும், குறிப்பாக ரொரன்ரோவின் மேற்கு பகுதியில், Weston வீதி மற்றும் Lawrence Avenue பகுதியில் குறித்த இந்தக் குழுவினரின் செயற்பாடுகள் அதிக அளவில் காணப்ப்டடதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் இன்று காலையில் ரொரன்ரொ, டூர்ஹாம், யோர்க் மற்றும் பீல் பிராந்தியங்களில் 50க்கும் அதிகமான சுற்றிவளைப்புத் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போது பெருமளவு துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இலக்கு வைக்கப்பட்ட “ஃபைவ் பொயின்ட் ஜெனரல்ஸ்”(Five Point Generalz) எனப்படும் வன்முறைக் குழுவானது ரொரன்ரோ முழுவதிலும் இடம்பெற்ற துப்பர்ககி வன்முறைகள், போதைப் பொருள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையது எனவும், ரொரன்ரோ மட்டுமின்றி கனடாவின் ஏனைய பகுதிகளிலும், அமெரிக்கா மற்றும கரீபியன் பிராந்தியங்களிலும் அதன் தொடர்புகள் காணப்பட்டதாகவும் ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.