சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஈராக் படைகள் நடாத்திய வான் தாக்குதல்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளை இலக்கு வைத்து ஈராக் நாட்டு போர் விமானங்கள் தாக்குதல்களை நடாத்தியுள்ளன.
இதில் அந்த அமைப்பைச் சேர்ந்த மூத்த முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், கொல்லப்பட்டவர்களுள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் போர்துறை அமைச்சர், ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் ஆகியோரும் அடங்குவதாகவும் தெரிவிக்க்பபடுகிறது.
ஈராக் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஈராக் இராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை விட்டு விரட்டி அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அங்கிருந்து அண்டை நாடான சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் இவ்வாறு பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் அண்டை நாடான ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன.