அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் அவர்களின் சொந்த நாட்டிற்கே உடனடியாக திருப்பி அனுப்புவதை விரைவுபடுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் மேற்கொண்டுள்ள கீச்சகப் பக்கப் பதிவில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் பட்சத்தில், நீதிபதிகள் அல்லது நீதிமன்ற வழக்குகளின் தலையீடு ஏதும் இன்றி, அவர்களின் சொந்த நாட்டிற்கே அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், அவர்கள் தங்களின் நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதை தாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்துகொண்டே அமெரிக்காவை துண்டாட முயற்சி செய்பவர்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், வலிமையான எல்லைகளே குற்றம் இல்லாத தேசத்தை உருவாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப்பின் இந்த பதிவுகள் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை இன்னமும் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை.