அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டு இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் உத்தரவை, அந்த நாட்டின் பிராந்திய நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
குயின்ஸ்லாந்தில் வசித்துவந்த இலங்கையர்களான நடேசலிங்கம் அவரது மனைவி பிரியா மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளையும் நாடுகடத்த ஏற்கனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதற்கு எதிராக அவர்கள் முன்வைத்திருந்த மேன்முறையீட்டை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம் நீக்கம் செய்தது.
எனினும் பிரியாவும் அவரது 3 வயதான குழந்தையும் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கி இருக்க உரிமைக்கோரி மீண்டும் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், அவர்கள் இருவரையும் நாடுகடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
ஆனால் பிரியாவின் கணவரான நடேசலிங்கம் மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோர் இன்னும் நாடுகடத்தப்படும் அபாயத்தில் இருக்கின்றனர்.
அதேநேரம் கடந்த வியாழக்கிழமை அவர்களை நாடுகடத்தும் வகையில் விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய 21 நாட்கள் கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.