இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என்று சனாதிபதி சிறப்பு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு வவுனியா வெளிக்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், காணாமல் போனவர்களின் விடயங்கள் மற்றும் வெள்ளைவான் விடயங்களை வைத்து அரசியலில் புகழாரம் பெற்றவர்கள் இன்று தேசிய அரசாங்கத்தில் இருந்து கொண்டு அவர்களை பற்றி பேசுவது இல்லை என்றும் சாடியுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை என்றும், அவர்கள் இறந்து விட்டார்கள் இல்லாவிடின் வெளிநாட்டிற்கு தப்பி ஒடிவிட்டார்கள் என்றும் நேரடியாகவே கூறியிருக்கிறார் எனவும், இப்படியான ஒரு நிலைமை இருக்கின்ற போது, காணாமல் போனவர்களிற்காக புதிய அலுவலகம் ஒன்றை அமைந்திருக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அலுவலகம் என்பது வெளிநாட்டினை ஏமாற்றுவதற்கான கண்கட்டி வித்தை எனவும், இந்த காணாமல் போன அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என்பது தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வன்னிப் பிரதேசம் போரால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம் எனவும், இந்த பிரதேசத்தில் மக்களின் வாக்குகறைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சமஸ்டியைப் பெற்றுத் தருவதாக கூறுகிறார்கள் எனவும், அரசியல் தீர்வு என்பது ஒரு புறமிருக்க இந்த மக்கள் மிகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது அபிவிருத்தி பற்றி கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு இனத்தின் இருப்புக்கு அபிவிருத்தியும், அரசியல் கோரிக்கையும் இரண்டு தண்டவாளங்கள் போன்று சமாந்தரமாக செல்ல வேண்டும் என்ற போதிலும், அதை கூட்டமைப்பினர் செய்ய வில்லை எனவும், கூட்டமைப்பினர் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மக்களது பிரச்சனை தொடர்பில் அரசாங்கத்திற்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர்கள் எதிர்கட்சி தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டு அதை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும், அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க முயல்கிறார்களே தவிர மக்களது அபிவிருத்தியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பிரபா கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.