இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி விசாரணை கோரி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது சிறப்பு அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்ற வேண்டும் என்று கோரும் பிரேரணை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ் மாநகரசபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் மணிவண்ணன் இன்று சபையில் சமர்ப்பிது உரையாற்றினர்.
பின்னராக சபையின் ஏகமனதான தீர்மானத்துடன் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தப் பிரேரணையில், இலங்கைத்தீவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் – ஐ.நா மனித உரிமை பேரவை 2015ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தில் – தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளில் இருந்து இலங்கை அரசு விலகியுள்ளமையும், இலங்கை அரசு அத்தீர்மானத்தை உதாசீனம் செய்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2017 ஆம் ஆண்டு மார்ச் இல் வழங்கப்பட்ட 2 ஆண்டுகால அவகாசத்தின் முதல் அரைப்பகுதியிலும் ஜெனீவா நிறைவேற்ற இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளது எனவும், போருக்குப் பின்னராக – தொடர்ச்சியாக பதவிக்குவந்த அரசாங்கங்கள் அனைத்தும் உள்ளக ரீதியாக விசாரணைகளைச் செய்வதற்கான அரசியல் விருப்பை குறைந்தபட்சமேனும் கொண்டிருக்காமை நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா மனித உரிமை பேரவை அனைத்துலக குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரமற்ற சபை என்பதாலும், இலங்கை விவகாரம் தொடர்பில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கத்தை
அளிக்கும் தீர்மானத்தை அல்லது சிறப்பு அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்ற வேண்டும் என்று கோருவதாகவும் அந்த பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.