யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – சுழிபுரத்தில் ஆறு வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாகவும், குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி மயூரதனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் சுவாசம் தடைப்பட்டு அவர் மரணித்துள்ளதாகவும், சிறுமியை கொலை செய்யும் நோக்குடனேயே கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டுள்ளதெனவும் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுழிபுரம் – காட்டுபுலம் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயது சிறுமி, அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சட்ட மருத்துவ அதிகாரி மயூரதன் தலைமையில் மருத்துவ பீட மாணவர்களின் முன்பாக உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதையடுத்து குறித்த சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலம் இன்றே அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.