சிறிலங்கா இராணுவத்தினரோடு இந்திய இராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ள அவர், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு, இந்தியா பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் பரிசுகளை அள்ளி வழங்குவதும் தொடர்கதையாக நடக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்திய அரசு, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தை இலங்கைக்கு அனுப்பி, சிறிலங்கா இராணுவத்தினர் 80 பேரை அழைத்துக் கொண்டு வந்து, புத்த கயா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி விபின் ராவத், நல்லெண்ணப் பயணம் என்று சொல்லிக் கொண்டு கொழும்புக்குச் சென்றபோது, சிறிலங்கா இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக வேண்டுகோள் விடுத்த நிலையில், அதனை இந்தியத் தளபதி ஏற்றுக் கொண்டதாகவும், அதற்காகவே சிறப்பு விமானத்தை அனுப்பி சிறிலங்கா இராணுவக் குடும்பங்களை சுற்றுலாவுக்கு அழைத்து வந்துள்ளனர் எனவும் அவர் சாடியுள்ளார்.
அந்த இராணுவத்தினரும், அவர்கள் குடும்பத்தினரும், இந்திய விமானப் படையின் சி 17 குளோப் மாஸ்டர் என்ற விமானத்தில் இந்தியா வந்துள்ளனர் எனவும், 2005ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலும், சிறிலங்கா இராணுவத்தினரோடு இந்திய இராணுவத்தினர் அடிக்கடிக் கொழும்பில் சந்தித்துக் கொண்டாடிக் கும்மாளம் போட்டதுபோல், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக கட்சி ஆட்சியில் அது இன்னமும் வீரியமாகத் தொடர்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை செய்த குற்றவாளிகளைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துப் பாராட்டும் இந்திய அரசை, மானத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும், தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு விதைக்கின்ற வினைகளுக்கெல்லாம், உரிய அறுவடையைக் காலம் தீர்மானிக்கும் எனவும் வைகோ தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.