தென் சீனக்கடல் விவகாரத்தில் பிராந்தியத்தின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சீன அதிபர் அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.
அந்த பேச்சுக்களைத் அடுத்து கருத்து வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்ததாகவும், சீனாவுடனான இராணுவ உறவிற்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை குறித்த சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், சீனா அமைதிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற போதிலும், தன் பிராந்தியத்தின் ஒரு அங்குலத்தைக் கூட அது விட்டுக்கொடுக்காது என்று கூறியுள்ளார்.
வர்த்தக போர் மற்றும் தென் சீன கடலின் நிலப்பகுதி விவகாரம் தொடர்பாக சீனா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிடையேயான பதற்றம் அதிகரித்து வருகிற நிலையில் ஜேம்ஸ் மேட்டிஸின் இந்த சீனப் பயணம் அமைந்துள்ளது.
அவரின் இந்த பயணத்தை அடுத்து 2014ஆம் ஆண்டிற்கு பின்னர் சீனாவிற்கு சென்றுள்ள முதல் பென்டகன் தலைவராக ஜேம்ஸ் மேட்டிஸ் விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல்பகுதி முக்கிய கப்பல் போக்குவரத்து பாதை என்பது மட்டுமல்லாது, அதிக மீன் வளங்கள் உள்ள பகுதியாகவும் உள்ளதுடன், அங்கு எண்ணெய் வளங்களும் அதிகளவில் இருப்பதாக நம்பப்படுகிறது.