ஒன்ராறியோ மாநில அரசின் புதிய முதல்வராக முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஒன்ராறியோ சட்டமன்றுக்கான தேர்தலில், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சியினை வீழ்த்தி ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றியினைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் வெற்றி பெற்ற முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவர் டக் ஃபோர்ட் இன்று காலையில் தனது புதிய அமைச்சரவையுடன் இணைந்து சத்தியப்பிரமானம் எடுத்துக் கொள்ளவுள்ளார்.
புதிய ஒன்ராறியோ அரசின் அமைச்சரவை விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், முன்னைய லிபரல் அரசின் அமைச்சரவையை விடவும் தமது அமைச்சரவை சிறிதாகவே இருக்கும் என்ற தகவலை மாத்திரம் டக் ஃபோர்ட் இதுவரை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஒன்ராறியோவின் சட்டமன்றமும் எப்போது முதன்முறையாக கூடும் என்ற அறிவிப்புகளும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இன்று வெளியிடப்படவுள்ள அமைச்சரவை விபரங்களை அறிந்து கொள்வதில் ஏனைய அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.