6 வயது பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதி கோரி வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு குற்றவளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், காவல்துறை காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுழிபுரத்தில் 6 வயது பாடசாலை மாணவி றெஜினா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய இன்று கடையடைப்பும் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு தொடர்ச்சியாக சுழிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை அங்கிருந்து பேரணியாகச் சென்று சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் மனு ஒன்றினைக் கையளித்திருந்தனர்.
இதன் பின்னர் அங்கிருந்து பேருந்துகளில் யாழ் சுண்டுக்குழியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் மனு ஒன்றினைக் கையளித்த அவர்கள், அதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.