இலங்கையின் வட பிராந்தியம் உட்பட 7 மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வரட்சி நிலை காரணமாக, 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
நீர் நிலைகள் வற்றிக் காணப்படுவதனால், சுத்தமாக குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்டதூரம் செல்ல வேண்டி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய தற்போது நிலவும் வரட்சி காரணமாக, யாழ். மாவட்டத்தில் 30,408 குடும்பங்களைச் சேர்ந்த 110,156 பேரும், வவுனியா மாவட்டத்தில், 828 குடும்பங்களைச் சேர்ந்த 3,648 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில், 21,272 குடும்பங்களைச் சேர்ந்த 72,263 பேரும், மன்னார் மாவட்டத்தில், 29, 421 குடும்பங்களைச் சேர்ந்த, 102,163 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் 726 குடும்பங்களைச் சேர்ந்த, 14,155 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 3,374 குடும்பங்களைச் சேர்ந்த 10,145 பேரும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில பகுதிகளிலும் வரட்சியான நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் விவசாயிகள் தமது நாளாந்த விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.